இந்தியாவில் வெட்டுக்கிளி படையெடுப்பு தமிழகத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்துமா
இந்தியாவை மிரட்டும் வெட்டுக்கிளி படையெடுப்பு தமிழகத்தையும் தாக்குமா? வேளாண்மைத்துறை விளக்கம்
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள வெட்டுக்கிளி படையெடுப்பு தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வேளாந்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் இன்று காலை பரவலான பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக புகுந்தது. சில நேரம் கழித்துதான் ராஜஸ்தானின் 33 மாவட்டங்களில் வெட்டுக்கிளி படையெடுப்பு நிகழ்ந்தது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநில வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக இந்த வெட்டுக்கிளி படையெடுப்பானது பாகிஸ்தான் எல்லையையொட்டிய மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை மட்டுமே வரும். ஆனால், இந்த ஆண்டு ஜெய்ப்பூர் வரையிலும், இந்தியாவின் மத்திய பகுதியான மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயம் உள்ளிட்ட பல இடங்களில் வந்திருப்பதும், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Locust swarms attack என்றழைக்கப்படும் பெரிய அளவிலான வெட்டுகிளிகள் கூட்டமாக படையெடுத்து வந்து பயிர்களை உண்பது பல ஆண்டுகளாக நம் புவியில் நடந்து வருகிறது. பாலைவனப்பகுதிகளை ஒட்டிய நாடுகளான ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை. பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைகின்றன. ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் 4 கோடி வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 80,500 கிலோ வேளாண் பயிர்களை உணவாக உட்கொள்ளும். இது ஒரு நாளில் 35,000 மனிதர்கள் உண்ணும் உணவிற்கு சமமாகும்.
உலகளவில் மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளி படையெடுப்புகள் Locust Plague என்றழைக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இப்படியான சம்பவங்கள் 1926-1934, 1940-1948, 1949-1963, 1967-1969, 1986-1989 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. சரியாக 26 ஆண்டுகள் கழிந்து கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகந்தது. நடப்பாண்டு பிப்ரவரி வரைக்கும் அது தொடர்ந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 6,70,000 ஹெக்டேர் பரப்பளவில் வேளான் பயிர்கள் பாதிப்படைந்தது. இதனால் 1,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்தது. இதுகுறித்து நம்மிடம் பேசிய பூச்சியியல் நிபுணரும் நந்தனம் அரசு கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான ஏழுமலை “இந்த வெட்டுக்கிளிகள் தொடர்ச்சியாக சூழலுக்கேற்றவாறு தனது டி.என்.ஏவை தகவமைத்துக் கொள்ளும் திறன் கொண்டவை. உணவு அதிகமாக கிடைக்கும் காலம், தங்கள் உயிர் வாழ்வதற்கான ஏற்ற சூழல் என்பதை சரியாக உணர்ந்து கொண்டுதான், இவை முட்டையிலிருந்து இளம் உயிரியாக பிறந்து முதிர் உயிரியாக மாறி இனப்பெருக்கம் செய்து பயணிக்கின்றன. தொடர்ச்சியாக சூழலுக்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் இருப்பதாலேயே இவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் ஆயுட்காலமானது 6 முதல் 8 வாரங்களாகும். தனது ஆயுட்காலத்தில் மூன்று முறை வெட்டுக்கிளி முட்டையிடுகிறது. இலைகளுக்கு கீழ்பகுதியில் மட்டுமின்றி ஈரமான மண் தரையிலும் முட்டையிடக் கூடியது. அறுவடைக்கு தயாராக விளைந்து கிடக்கும் வேளான் பரப்பு எங்குள்ளது என்பதையறிந்து காற்றின் திசையிலும் பயணிப்பதால் இவற்றால் ஏற்படும் பாதிப்பு என்பது மிகவும் அதிகம். காலநிலை மாற்றமும் இந்த வெட்டுக்கிளிகள் பல்கிப் பெருக ஒரு காரணமாகவுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் தக்காண பீடபூமியைத் தாண்டி இந்த வெட்டுக்கிளிகள் வந்ததில்லை என்றாலும் இந்தியாவில் இந்த வெட்டுக்கிளிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளையும் இவை குறித்த ஆராய்ச்சிகளையும் மேம்படுத்த வேண்டும்’என்றார்
தற்போது கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, தெற்கு ஈரானில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான் நோக்கி புலம்பெயர தொடரும் எனவும் இவை இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஏற்கெனவே ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)எச்சரித்திருந்தது.
தற்போது இந்தியாவில் நடந்து வரும் வெட்டுக்கிளி படையெடுப்பால் தென்னிந்திய பகுதிகளுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை என்று தமிழ்நாடு வேளாண்துறையின் பயிர்ப் பாதுகாப்பு பிரிவின் இணை இயக்குனர் முரளிதரன் தெரித்துள்ளார். இதுகுறித்து நம்மிடம் மேலும் பேசிய அவர் “மத்திய வேளான் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் The Locust Warning Organisation (LWO) மூலம் தொடர்ச்சியாக அறிவிப்புகளை பெற்று வருவதாகவும் தமிழ்நாட்டிற்கு இந்த வெட்டுக்கிளிகள் வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுப்பதற்கான பணிகளை வேகப்படுத்தாவிட்டால் மிகப்பெரும் உணவுப்பஞ்சம் ஏற்படுமளவிற்கான பாதிப்புகள் உண்டாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நன்றி: News18.
பதிவு: உசிலை.p.m.தவசி
தமிழ் ஒளி செய்திகள்
Comments (0)
Facebook Comments