தே. கல்லுப்பட்டி அருகே பல பள்ளி குழந்தைகளின் உயிரை பறிக்க காத்திருக்கும் அரசு பள்ளி கட்டிடம், கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு அதிகாரிகள்
மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டி அருகே கூவலப்புரம் என்ற கிராமத்தில் தான் பல பள்ளி குழந்தைகளின் உயிரை பறிக்க காத்திருக்கிறது, கூவலப்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.
இப்பள்ளி முதன் முதலில் 29/1/1993 அன்று பள்ளி கட்டிடத்திறப்பு விழா நடைபெற்று திரு. கு. ஆளுடையபிள்ளை இ. ஆ. ப மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் 2002-2003ஆம் ஆண்டில் மீண்டும் புது கட்டிடம் கட்டப்பட்டு இதுவரை காலங்கள் கடந்தன.
இப்போது இந்த பள்ளியின் கட்டிடங்கள் மிகவும் ஆபத்தான, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு சிறந்த கழிப்பறை வசதியும் இல்லை இதனால் சுகாதார கேடு விளைவிக்கும் அவலமும், அதுவும் இடியும் நிலையில்தான் உள்ளது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் மட்டும் இக்கட்டிடத்தில் பயின்று வருகின்றனர்.
மற்ற குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் பயில அருகில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் வழியில் குழந்தைகள், சாலைகளை கடந்த செல்ல வேண்டியுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதனை கிராம மக்கள் அனைவரும் வட்டார வளர்ச்சி அலுவலர்(BDO) மற்றும் கிராம சபை கூட்டத்தில் (ஆகஸ்ட் 15)அன்று முன்வைத்து பள்ளிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, சரிசெய்து தரும்படியும் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பான பள்ளியை உருவாக்கி தரும்படியும் கிராம மக்கள் அனைவரும் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாகும்.
இதனால் அந்த பகுதியில் உள்ள பெற்றோர்கள் தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்ததால் அங்குள்ள குழந்தைகளின் ஆரம்ப நிலை கல்வியே கேள்வி குறியாகியுள்ளது. பள்ளி குழந்தைகளின் கல்வி முறையை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் இனியாவது இதனை சரிசெய்து புது கட்டிடங்கள் அமைத்தும், சிறந்த கல்வி முறையை கொண்டு வரவேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்களின் எதிர்பார்ப்பு.
திரு. பா. வேல்முருகன்,
தமிழ் ஒளி செய்தியாளர்.
Comments (0)
Facebook Comments